சென்னை,
சட்டம் ஒழுங்கை மக்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் எதற்கு? என கனிமொழி கருணாநிதி எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, அப்போது பேசியதாவது:-
முதல்-அமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் காவல்துறை மானியம் குறித்து பேசுவார். எதிர்க்கட்சிகள் எழுப்பிய சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக பழைய கமிஷன் அறிக்கைகளைப் பற்றி பேசி இருக்கிறார்.
காவல்துறை மானியம் தொடர்பாக முதல்-அமைச்சர் பேசுவார், அதில் காவல்துறை தொடர்பாக என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பதை அறிந்துகொள்ள அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம்.
ஏனெனில் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு நாளும் கொலைகள் நடைபெறும் ஒரு மோசமான சூழ்நிலைக்கு தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், இதற்கெல்லாம் முதல்-அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார், இதைச் சரிசெய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து மக்களுக்கு தெளிவான பதிலை வழங்குவார் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால், அதற்குப் பதிலாக பழைய கதைகளை சட்டமனறத்தில் பேசியிருக்கிறார். ஒரு பைசாவிற்குக்கூட பிரயோஜனம் இல்லாத சில கமிஷன் அறிக்கைகளை எடுத்துப் படித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முந்தைய, சட்டரீதியாக பயன்படுத்த முடியாத, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாத, அதன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத அறிக்கைகளை வாசித்துவிட்டு, உலகமே இதுவரை கண்டறியாத மிகப்பெரிய உண்மையை கண்டறிந்தவர் போல முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார்.
எமர்ஜென்சி காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ஜனநாயகத்திற்காக எத்தனை பேர் போராடி சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்? எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்? அவர்களுடன் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த எத்தனை தோழர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்? இந்த வரலாறு முதல்-அமைச்சருக்கு தெரிய வேண்டும். மற்றவர்கள் மீது சேற்றை அள்ளி வீசுவதற்காக மட்டுமே சட்டமன்றம் இருக்கிறது என்ற நிலையை நாம் இன்று பார்க்கிறோம். நிச்சயமாக மக்கள் இதற்குத் தகுந்த பதிலை அவர்களுக்கு சொல்லித் தருவார்கள்.
முன்னதாக முதல்-அமைச்சருக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதை புரிந்துகொள்ளாமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதுதான் சட்டமன்ற நடவடிக்கை என்று நினைத்து, சட்டமன்றத்தின் மாண்பையே கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், முதல்-அமைச்சரின் இன்றைய பேச்சு மிகவும் கீழ்த்தரமான நிலையைத் தொட்டுவிட்டது என்ற அளவுக்கு இருந்தது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் உள்ளிட்டவை தனிப்பட்ட பிரச்சினைகள் என்றும், இதனால் தமிழ்நாடு அளவில் பெரிய அளவில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படவில்லை என்றும் கூறுவது போல பேசியிருக்கிறார்.
சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்க வேண்டிய ஒரு முதல்-அமைச்சர் எப்படி மக்களே பார்த்துத் திருந்த வேண்டும், மக்களே பார்த்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இதையெல்லாம் ஒரு முதல்-அமைச்சர் தன்னுடைய பொறுப்புணர்வுடன் பேசுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.