சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு எரிசக்தித்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மின் உற்பத்தித் திறன், மின் தேவை, மின் விநியோகம், நிதிநிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்கால உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதவியேற்றவுடன் முதல் கையொப்பமிட்ட முக்கிய வாக்குறுதியான 500 யூனிட்டுகளுக்குள் மின் பயன்பாடு இருக்கும் அனைத்து வீட்டு மின்இணைப்புகளுக்கும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் 10.5.2026 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர், வேகமாக வளர்ந்து வரும் மாநகரத் தேவைகள், தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் விவசாயத்திற்கு தடையில்லா மின்சாரம், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை நிதி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சவால்களிருப்பினும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட அன்றாட நுகர்வோர் சார்ந்த குறைகளுக்கான காரணங்கள் மற்றும் தீர்வு காணும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாநிலத்தின் உச்சபட்ச மின் தேவையான 21,326 மெகா வாட் மின்சாரம் எவ்வித மின் தடையுமின்றி மின்வாரியம் விநியோகம் செய்தது குறித்தும், மாநிலத்தின் கடந்த கால மின் பயன்பாடு, தற்போதைய மின் உற்பத்தி நிலவரம் மற்றும் தடையற்ற மின் விநியோகம் செய்திட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அதேபோல், புதிய துணை மின்நிலையங்கள் அமைத்தல், பழைய மின்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல், புதிய மின்கம்பிகள் அமைத்தல் மற்றும் தென் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாக பயன்படுத்தும் வகையில் பசுமை மின்வழித்தடமான கிரீன் காரிடார் (Green Corridor) உள்ளிட்ட தற்போது நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளை விரைவுபடுத்துதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கோடை மற்றும் எதிர்வரும் பருவ மழைக்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேவையான மின் கம்பம், மின் கம்பிகள், மின் விநியோக மின்மாற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மின் தளவாடங்கள் தேவையான அளவு முன்கூட்டியே இருப்பு வைத்துள்ளது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, கூடுதல் தலைமைச் செயலாளர் / மின் வாரியத் தலைவர் ராதாதிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.