இருக்கன்குடி,
விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ரூ. 23 கோடியே 67 லட்சம் செலவில் பக்தர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல் அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உதவிப் பொறியாளர் (கட்டுமானம்), உதவி ஸ்தபதி மற்றும் செயல் அலுவலர் பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் இன்று (18.8.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில், ரூ.23 கோடியே 67 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவிப் பொறியாளர் (கட்டுமானம்), உதவி ஸ்தபதி மற்றும் செயல் அலுவலர் (நிலை–1 மற்றும் நிலை–3) ஆகிய பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 23 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், 125 நபர்கள் ஒரேநேரத்தில் அமர்ந்து உணவருந்தும் வகையிலான அன்னதானக் கூடம், 25 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வகையிலான 24 விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைப் பக்தர்களின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள சமய நிறுவனங்களை நிர்வகித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், சொத்துகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுவரும் அலுவலர் மற்றும் பணியாளர் பணியிடங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 36 உதவிப் பொறியாளர்கள் (கட்டுமானம்), 38 உதவி ஸ்தபதிகள், 6 செயல் அலுவலர்கள் (நிலை-1 மற்றும் நிலை-3) என மொத்தம் 80 நபர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பணிநியமன ஆணைகளை இன்று வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்து சமய அறநிலையத் துறைக்காக முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவிப் பொறியாளர் (கட்டுமானம்) மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தலைமைச் செயலாளர் சாய்குமார், ஐ.ஏ.எஸ்., வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் குமரகுருபரன், ஐ.ஏ.எஸ்., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய், ஐ.ஏ.எஸ்., கூடுதல் ஆணையர்கள் துரை ரவிச்சந்திரன், ஐ.ஏ.எஸ்., ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.