தமிழக செய்திகள்

108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு

உயிரிழப்புகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.

சென்னை,

சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்புத் திட்டத்தின் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவசரகால மேலாண்மை சேவை

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (17.11.2026) சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட்டுவரும் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்திற்கு (Emergency Response Call Centre) நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர், பொதுமக்களுக்கு ஏற்படும் அனைத்து வகையான அவசர மருத்துவச் சூழல்களிலும் உதவுவதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் EMRI GHS அமைப்பால் இயக்கப்பட்டுவரும் பல்வேறு வகையான அவசரகால ஊர்திகளை நேரில் பார்வையிட்டார்.

மேலும், வரவிருக்கும் பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம், புயல் மற்றும் தொடர் மழையினால் உண்டாகும் இயற்கைப் பேரிடர் சூழல்களில், அவசரகால மேலாண்மை சேவைகளை வழங்குவதற்காக '108' அவசரகால ஊர்தி சேவைகள் பிரிவு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அவரசகால அழைப்பு சேவை

அவசரகால ஊர்திகளில் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவ உபகரணங்கள், மீட்புக் கருவிகள், புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான உபகரணங்களையும் பார்வையிட்டதோடு, ‘108’ அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மைய நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் அணுகல் முறை, அழைப்பு மையத்திற்குள், புவியிட அமைப்புக் கருவி (GPS) நகர்வுகளின் அடிப்படையில் அழைப்பு மையத்திலிருந்து அவசரகால ஊர்திகளுக்கு சேவை ஒதுக்கீடு செய்யப்படும் நடைமுறை ஆகியவற்றை தமிழ்நாடு முதல்-அமைச்சர், அவசரகால உதவி அழைப்பு மைய அலுவலரிடம் (Emergency Response Officer) கேட்டறிந்தார்.

மேலும், '104' - சுகாதார உதவி எண், '14416' - தொலைநிலை மனநலச் சேவை, '102' – பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சேவை, '155377' - இலவச அமரர் ஊர்தி சேவை போன்ற பிற துணை மருத்துவ சேவைகள் குறித்தும், இயற்கைப் பேரிடர் காலங்களில், தற்போதுள்ள சென்னை அவசரகால அழைப்பு சேவை மையத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துணை அவரசகால அழைப்பு சேவை மையத்திற்குச் செயல்பாடுகளை மாற்றும் நடைமுறை குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அதிநவீன உயர் சிகிச்சை

அவசரகால மருத்துவச் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்புத் திட்டத்தை (TAEI) மாநிலம் முழுவதும் 132 மையங்களில் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவசர மருத்துவத்துறை (Emergency Department) தொடங்கப்பட்டு, CT Scan, MRI Scan போன்ற அதிநவீன உயர் சிகிச்சை உபகரணங்கள் வழங்கப்பட்டு, ஆறு மணிநேரத்திற்குள் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த அவசர மருத்துவத்துறை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் கேட்டறிந்ததோடு, அவசர மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வுக் கூட்டம்

108 அவசரகால ஊர்தி சேவையை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் கூடுதலாக நூறு எண்ணிக்கையிலான ‘108’ அவசரகால ஊர்திகள் கொள்முதல் செய்திட ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஊர்திகளைக் கொள்முதல் செய்து விரைவாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு முதல்-அமைச்சர், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT