தமிழக செய்திகள்

சென்னை மின்வாரிய தலைமையகத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு

இரவு நேர மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் தற்போது வெப்பம் சற்று அதிகரித்திருப்பதால் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.

இரவு நேர மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்சார வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அறிவிக்கப்படாத 2 மணி நேர மின்வெட்டுகளால் தொழில், விவசாயத்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்தில் முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று ஆய்வு செய்தார். மின்வெட்டு தொடர்பான புகார்கள் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள் குறித்தும், மின் உற்பத்தி, கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் ஆகியவை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் மின்கட்டமைப்பை வலுப்படுத்துவது, மின் தேவையை பூர்த்தி செய்வது, நுகர்வோர் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அமைச்சர் நிர்மல் குமார், மின் வாரிய தலைவர் அருண்ராய், பசுமை எரிசக்தி கழகம் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து மின்னகம், மாநில மின் பளு பகிர்ந்தளிப்பு மையத்தை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது மின்தடையின்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள், மின் உற்பத்தி, மின் தேவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

SCROLL FOR NEXT