சென்னை,
தமிழக முதல் அமைச்சர் விஜய் தலைமை செயலகத்தில் தினமும் தனது அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். நாள் தோறும் காலை 10 மணிக்கு தலைமை செயலகம் வரும் விஜய் மாலை 5 மணி வரை தலைமை செயலகத்தில் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது மக்களுக்கு பலன் அளிக்க கூடிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். அண்மையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாணவர்கள் விடுதியிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அதனை உடனே நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து திடீரென முதல் அமைச்சர் விஜய், சேத்துப்பட்டு வந்தார். சேத்துபட்டில் உள்ள இயற்கை எரிவாயு ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். நாளொன்றுக்கு 100 டன் உணவு, காய்கறி கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திறன் கொண்ட இயற்கை எரிவாயு ஆலையில் ஆய்வு செய்தார்.
இந்த ஆலை கோயம்பேடு சந்தை , ஹோட்டல் கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயுவை தயாரிக்கிறது. பொது- தனியார் கூட்டு பங்களிப்பு முறையில் முறையில் சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் இயங்குகிறது.
முதல் அமைச்சர் விஜய் வருகை தருவதை அறிந்து சேத்துபட்டில் சாலையோரம் மக்கள் திரண்டனர். இதையடுத்து, ஆய்வை முடித்துவிட்டு வந்த விஜய், வெளியே வந்து மக்களை பார்த்து கை அசைத்தார். முதல் அமைச்சர் விஜய்யை பார்த்து மக்களும் உற்சாகம் அடைந்து பதிலுக்கு கை அசைத்தனர்.