தமிழக செய்திகள்

12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முதல் - அமைச்சர் விஜய் திட்டமிடுகிறார் - ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

முதல்-அமைச்சர் விஜய் ஜனநாயக திருவிழாவிலே அடுத்தடுத்து ஆள் பிடிக்கிற வேலையில் சளைக்காமல் சாதித்து வருகிறார்.

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்றைக்கு முதல்-அமைச்சர் விஜய் ஊதுகின்ற மகுடிக்கு தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே மயங்கி கிடக்கிறார்கள் என யாரும் நினைத்து விட வேண்டாம். நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க கட்சியை எதிர்த்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து விஜய் ஊதுகிற மகுடிக்கு மயக்கம் அடைந்து வருகிறார்கள்.

ஜனநாயக கேலிக்கூத்து

அதில் கரூர் விஜயபாஸ்கர் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று விஜய் ஊதும் மகுடிக்கு மயங்கி போன 6-வது சட்டமன்ற உறுப்பினர், எங்கே போய் நிற்குமோ இந்த ஜனநாயக கேலிக்கூத்து. இப்படி தொடர்ந்து கொஞ்சமும் கூச்சம் அல்லாமல் அச்சமின்றி அரங்கேற்று வருகின்ற அரசியல் அலங்கோலத்தில் தட்டி கேட்பதற்கு விஜயின் மகுடிக்கு மயங்கி கிடக்கிற தமிழ் சமுதாயத்திற்கு இப்போது வேண்டுமானால் துணிச்சல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இனி இப்படியே தான் காலம் போகும் என்று முதல்-அமைச்சர் விஜய் நினைத்தால் அது தவறு. விரைவிலேயே தமிழ் சமுதாயம் உங்களுக்கு துணிச்சலான முடிவை தருவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயக திருவிழாவிலே அடுத்தடுத்து ஆள் பிடிக்கிற வேலையில் சளைக்காமல் சாதித்து வருகிறார் முதல்-அமைச்சர் விஜய். இது எதைக் காட்டுகிறது? கோவில் திருவிழாவிலே பிள்ளை பிடிக்கிறவர்களுக்கும், ஜனநாயக திருவிழாவிலே எம்.எல்.ஏ.க்களை பிடிக்கிறவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதுதான், இப்போது நமக்கு மட்டுமல்ல இந்த நாட்டு மக்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

பெரும்பான்மை பலம்

ஆகவே தமிழக வெற்றிக்கழகம் அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கிற வகையிலே 12 சட்டசபை தொகுதிகளுக்கு மொத்தமாக இடைத்தேர்தல் நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதுவரை இந்த அரசியல் அலங்கோலங்கள் ஜனநாயக கேலிக் கூத்துக்கள் இந்த தமிழ்நாட்டிலே அரங்கேற்றம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

என்ன செய்வது காற்று த.வெ.க பக்கம் வீசுகிறது ஆகவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று அந்த பழமொழியை உண்மை வழியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காற்று திசை மாறும். அப்படி காற்று திசை மாறுகிறபோது ஜனநாயகத்தின் வலிமை என்னவென்று விஜய்க்கு அப்போதுதான் புரியும். இருந்தாலும் இந்த ஜனநாயக கேலிகூத்தை நடத்துகிற ஆணவம் அழிவைத் தரும் என்பதை சுட்டிக்காட்டி எச்சரிக்கையாக இன்றைக்கு எல்லோரும் இருக்க வேண்டும். கரூர் விஜயபாஸ்கர் பொறுத்து இருக்க வேண்டாமா இது நியாயமா தர்மமா? என்று கேட்பதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.