சென்னை,
கரும்பு விவசாயிகளுக்குக் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-ஐ விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கித் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், கரும்பு விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில், சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தபடி, கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-ஐ விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பதைத் தொடங்கி வைக்கும் விதமாக, 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கரும்பு உற்பத்தியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து 2025-26 அரவைப் பருவத்திற்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குக் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர், 10.8.2026 அன்று சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்ததைத் தொடர்ந்து, அதனைத் தொடங்கி வைத்திடும் விதமாக இன்று 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 85,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். இதற்காக நடப்பு ஆண்டில் 603 கோடியே 33 லட்சம் ரூபாய் அரசுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படும். விவசாயிகளின் நலனையும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை, கரும்பு விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், தலைமைச் செயலாளர் சாய்குமார், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் வெங்கடேஷ், சர்க்கரை ஆணையர் கண்ணன், கூடுதல் இயக்குநர் அருண்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.