சென்னை,
வருகிற 30-ந்தேதி பசும்பொன்னில் நடக்கும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று மரியாதை செலுத்துகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்து ராமலிங்கத்தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தேவர் நினைவாலய அறங்காவலர்குழு தலைவர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் நடைபெறுகிறது.
முதல் நாளில் தேவரின் ஆன்மிக விழாவாக நடக்கிறது. அன்று கணபதி ஹோமம், லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை, தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் (29-ந் தேதி) தேவ ரின் அரசியல் விழாவாக நடைபெறுகிறது. 30-ந்தேதி தேவர் குருபூஜையையொட்டி காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது.
தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் மரியாதை செலுத்துகின்றனர். காலை 9 மணி அளவில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், த.வெ.க. நிர்வாகிகள் மரியாதை செலுத்துகின்றனர்.
விழாவுக்கு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் தலைவர்கள் வர இருப்பதால் விரிவான ஏற்பாடுகள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஆலோசனைகள் நடந்து வருகின்றன. முதல்-அமைச்சர் விஜய், வருகிற 30-ந்தேதி காலை மதுரை வருகிறார்.
கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும், தொடர்ந்து மருது பாண்டியர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் சாலை மார்க்கமாக வேனில் புறப்பட்டு பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு பசும்பொன் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.