தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்: விசிக எம்.பி.ரவிக்குமார்

அதிமுகவின் கொறடாவை நியமிக்க எடப்பாடி பழனிசாமிக்கே அதிகாரம் உள்ளது என விசிக எம்.பி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விசிக எம்.பி. ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சமீபத்தில் நடந்து முடிந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற 25 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இத்தகைய நடத்தை, அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின் கீழ் தகுதியிழப்பை ஏற்படுத்துமா என்பது ஒரு தீவிரமான அரசியலமைப்பு சார்ந்த கேள்வியாகும்.

மேலும், இவர்களில் சிலரை அமைச்சர்களாக நியமிக்க முதல்-அமைச்சர் விஜய் பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தகைய நியமனங்கள் சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பதும் ஒரு முக்கியமான விவகாரமாகும்.

தற்போதைய சூழலில், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே கட்சியின் கொறடாவை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. மராட்டிய அரசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மூலம் கோட்பாட்டை உறுதிபடுத்தியுள்ளது. அதிமுக தலைமையால் பிறப்பிக்கப்பட்ட கொறடா உத்தரவு, அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.

உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும் சாத்தியக் கூறு இருக்கிறது. அத்தகைய கொறடா உத்தரவை மீறும் எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும், 10-வது அட்டவணையின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். அதே சமயம், பிரிந்து சென்ற அதிமுக குழுவின் சில உறுப்பினர்களை முதல்-அமைச்சர் விஜய் அமைச்சர்களாக நியமிக்க விரும்பினால், அத்தகைய நியமனங்களுக்கு உடனடியாக அரசியலமைப்புத் தடை ஏதுமில்லை. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டு விளக்கியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(1-பி)-ன் படி, 10-வது அட்டவணையின் 2-வது பத்தியின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.எல்.சி அமைச்சராகப் பதவி வகிக்கத் தடை உள்ளது. ஆனால், இந்தத் தடையானது ஒரு சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும். பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கம் கோரும் மனு சபாநாயகரின் பரிசீலனையில் இருக்கும்போது, ஒரு உறுப்பினரை அமைச்சராக நியமிப்பதற்கு பிரிவு 164(1-B) முட்டுக்கட்டை போடாது.

அத்தகைய எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக நியமிக்க விரும்பினால், அரசமைப்புச் சட்ட ரீதியாக மிகவும் தெளிவான ஒரே வழி, அந்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, முறையாக தவெக கட்சியில் இணைந்து, இடைத்தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுப்பதே ஆகும்.

கட்சித் தாவல்களை ஏற்றுக்கொண்டு அதிமுக எம்எல்ஏக்களை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பார்களா?. முதல்-அமைச்சர் விஜய் முன்வைக்கும் தூய்மையான அரசியலுக்கு அது உகந்ததுதானா?. முதல்-அமைச்சர் விஜய் தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்.. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.