தமிழக செய்திகள்

மதுரை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் நிதியுதவி

விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் நிதியுதவி. மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று அதிகாலை அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் பெண், முதியவர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 42 பேர் படுகாயமடைந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ்

சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சொகுசு ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு பயணிகளுடன் புறப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி அளவில் இந்த பேருந்து திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மதுரை கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை தாண்டி எதிர்த்திசை சாலைக்குள் தாறுமாறாக பாய்ந்தது.

நேருக்கு நேர் மோதல்

அதே நேரத்தில், மதுரையிலிருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிரே பாய்ந்து வந்த ஆம்னி பேருந்து, கண் இமைக்கும் நேரத்தில் அரசு பேருந்து மீது பலத்த சத்தத்துடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் போது பேருந்துகளுக்குள் தூங்கி கொண்டிருந்த பயணிகள் அலறல் சத்தம் போட்டனர். விபத்து நடந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

6 பேர் பரிதாப பலி

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஆனந்தராஜ் (திருச்சி), சூர்யா (திருச்சி), முகமது யாசின் (திருவாரூர்), சிறிய புஷ்பம் (திருநெல்வேலி), ஆபிரகாம் (திசையன்விளை) ஆகிய 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.மேலும், விபத்தின் போது பயணிகள் நிழற்குடையில் உறங்கி கொண்டிருந்த உள்ளூர் முதியவரான பெருமாள் (70) என்பவர் மீது ஆம்னி பஸ் மோதியதில், அவரும் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தீவிர சிகிச்சை

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் மற்றும் கொட்டாம்பட்டி போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய பயணிகளை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்ததாகவும், இந்த விபத்து குறித்து அறிந்த முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது நிவாரண நிதி

இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 7 நபர்களுக்கும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 3 லட்சமும், படுகாயமடைந்த 7 நபர்களுக்குத் தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்த 15 நபர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்துக் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்."