தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்-ராகுல் காந்தி சந்திப்பு நிறைவு - இருவரும் ஒரே காரில் பயணம்

முதல்-அமைச்சர் விஜய்யும், ராகுல் காந்தியும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

சென்னை,

இந்திய கல்வி முறையில் நடைபெறும் முறைகேடுகள், நீட் உள்ளிட்ட தேர்வுத்தாள் கசிவுகள், கல்விக் கட்டண உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை திரட்டி நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 'மாணவர்களின் குரல்' என்ற நிகழ்ச்சி வாயிலாக மாணவர்களிடம் பேசி வருகிறார்.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தொடங்கி, மராட்டிய மாநிலம் புனே மற்றும் நாசிக் நகரங்கள், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் போன்ற இடங்களில் மாணவர்கள் குரல்' நிகழ்ச்சி நடத்திய ராகுல் காந்தி, இன்று சென்னையில் உள்ள தீவுத் திடலில் மாணவர்கள் முன்னிலையில் பேச இருக்கிறார்.

முதல்-அமைச்சருடன் சந்திப்பு

மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள முதல்-அமைச்சர் விஜய் வீட்டிற்கு ராகுல் காந்தி சென்றார்.

அங்கு ராகுல் காந்திக்கு விஜய் மதிய உணவு விருந்து அளித்தார். பின்னர் இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். கட்சி நிர்வாகிகள் இன்றி தனியாக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே காரில் பயணம்

சுமார் ஒரு மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் ராகுல் காந்தியும், முதல்-அமைச்சர் விஜய்யும் நீலாங்கரையில் இல்லத்தில் இருந்து புறப்பட்டு ஒரே காரில் பயணம் செய்தனர். தொடர்ந்து பாலவாக்கத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் தோனிக்கு சொந்தமான ஒரு உணவகத்திற்கு சென்று தேநீர் அருந்தினர். தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரின் சந்திப்பையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT