முதல்வர் விஜய் ரசிகரை நலம் விசாரித்த காட்சி  
தமிழக செய்திகள்

30 ஆண்டு கால ரசிகரை அடையாளம் கண்டு தோளில் கைபோட்டு நலம் விசாரித்த முதல்வர் விஜய்!

ரங்கராஜின் தோளில் பாசத்துடன் கைபோட்ட முதல்வர் விஜய், "எப்படி இருக்கீங்க? குடும்பத்தினர் அனைவரும் நலம் தானா?" என்று மிகவும் எளிமையாக நலம் விசாரித்தார்.

கோவை,

கோவையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்திலும், 30 ஆண்டுகளாக தன்னுடன் இருக்கும் ஒரு சாதாரண தொண்டரைத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அடையாளம் கண்டு நெகிழ்ந்த சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

முதல்வர் கோவை வருகை

ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) கோவைக்கு வருகை தந்தார். கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே அவருக்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். அப்போது சாலையோரம் திரண்டிருந்த மக்களை நோக்கி முதல்வர் விஜய் ரோடு ஷோ போல மெதுவாக காரில் சென்றார்.

கூட்டத்தில் மின்னிய அடையாளம்

விமான நிலையத்தின் பிரதான சாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலெனத் திரண்டிருந்தனர். அந்த கூட்டத்திற்கு நடுவே மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூத்த ரசிகர் மன்ற நிர்வாகி ரங்கராஜ் நின்று கொண்டிருப்பதை முதல்வர் விஜய் சட்டென அடையாளம் கண்டுகொண்டார். உடனடியாக தனது காரை நிறுத்தச் சொன்ன முதல்வர், பாதுகாப்பு படையினரிடம் கூறி ரங்கராஜை அருகில் அழைத்தார்.

தோளில் கைபோட்ட ஜன நாயகன்

பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி காரின் அருகில் வந்த ரங்கராஜின் தோளில் பாசத்துடன் கைபோட்ட முதல்வர் விஜய், "எப்படி இருக்கீங்க? குடும்பத்தினர் அனைவரும் நலம் தானா?" என்று மிகவும் எளிமையாக நலம் விசாரித்தார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பும், தன் மீது காட்டிய அதே பழைய பாசத்துடன் விஜய் பேசியது அங்கிருந்த தொண்டர்களை நெகிழ்த்தியது.

30 வருசமா விஜய் ரசிகன்; என்னை மறக்கல!

முதல்வரின் இந்த எதிர்பாராத பாச மழையால் கண்கலங்கிய ரங்கராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "30 வருசமா நான் விஜய் ரசிகனா இருக்கேன். 'ஒன்ஸ் மோர்' பட காலத்துல இருந்து அவரோட பயணிக்குறேன். தமிழ்நாட்டோட முதல்வராக பெரிய இடத்திற்குப் போன பின்பும், இவ்வளவு கூட்டத்திலும் என்னை அவர் மறக்கல!" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வைரலாகும் வீடியோ

திரைத்துறையில் இருந்து விடைபெற்று முழுநேர அரசியலில் இறங்கி முதல்வராக பொறுப்பேற்ற பின்பும், ஆரம்ப காலம் தொட்டு தன் மீது அன்பு செலுத்தும் அடித்தட்டு தொண்டர்களை முதல்வர் விஜய் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் இந்த நேரடி வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களால் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT