தமிழக செய்திகள்

தலைமைசெயலகத்தில் நாற்காலியில் வெள்ளை துண்டை அகற்றிய முதல்-அமைச்சர் விஜய்

நாற்காலியில் வெள்ளை துண்டு போடும் கலாசாரத்தை முதல்-அமைச்சர் விஜய் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர்ஜோசப் விஜய், தனது அதிரடி நேர மேலாண்மை (Time Management) மூலம் தலைமை செயலக அதிகாரிகளைப் பிரமிக்க வைத்துள்ளார்.

ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போலத் தினமும் காலையிலேயே தலைமைச் செயலகத்திற்கு வருவது மட்டுமின்றி, மதிய உணவையும் வீட்டிலிருந்தே கையோடு தூக்கிக்கொண்டு வந்து சாப்பிடும் அவரது எளிய வழக்கம் தற்போது தலைமைசெயலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி ஒழுங்குமுறை, அங்குள்ள மூத்த ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசாரிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறையில் துல்லியமான டைம் மேனேஜ்மெண்ட்க்கு பெயர்பெற்ற விஜய், தற்போது அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்திலும் அதே பாணியைக் கடைப்பிடித்து வருகிறார். பதவியேற்ற நாள் முதல் இன்று வரை அவர் தலைமைச்செயலகத்திற்கும் வரும் நேரங்களின் பட்டியல் அதிகாரிகளை அதிர வைத்துள்ளது.

முந்தைய ஆட்சிக்காலங்களில் முதலமைச்சர்கள் கோட்டைக்கு வரும் நேரமும், அதற்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளும் பொதுமக்களுக்குப் பெரும் சவாலாக இருந்தன. ஆனால், முதல்-அமைச்சர் விஜய் முன்பாகவே தலைமை செயலகத்திற்கு வந்துவிடுவதால் பொதுமக்களுக்கு எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படுவதில்லை.ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துகொண்டு, எந்தவித பந்தாவும் இன்றி அரசு ஊழியர் போல் நேரத்தோடு வருவது, மதிய உணவை பாக்ஸில் எடுத்து வந்து சாப்பிடுவது போன்ற எளிய செயல்களைப் பார்த்துத் தலைமைச் செயலக மூத்த அதிகாரிகளும், பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசாரும் தங்களது வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மற்றொரு வியப்பாக நாற்காலியில் வெள்ளை துண்டு போடும் கலாசாரத்தை முதல்-அமைச்சர் விஜய் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். அதிகாரத்தின் அடையாளமான டவள் கல்ட்சர் (Towel Culture-ஐ) பின்பற்ற கூடாது என கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் வெள்ளை துண்டை முதல்-அமைச்சர் அகற்றியுள்ளார் என்பது தலைமைச்செயலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.