தமிழக செய்திகள்

பிரசார வாகனத்தில் பெரம்பூர் புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய்

த.வெ.க. நிர்வாகிகள் வழிநெடுகிலும் முதல்-அமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

எம்.எல்.ஏ. அலுவலகம்

அதன்படி, பெரம்பூர் தொகுதி அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பகுதியில், "பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ச.ஜோசப் விஜய்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் விஜய்க்காக தனி அறையும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தினுள் தனியாக கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

உற்சாக வரவேற்பு

இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் விஜய் தற்போது தனது பிரசார வாகனத்தில் பெரம்பூர் புறப்பட்டு சென்றுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இன்று முதல் முறையாக அவர் தனது தொகுதிக்குச் செல்வதால், அவருக்கு த.வெ.க. நிர்வாகிகள் வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடம் ஒன்றை புதுப்பித்து, அதனை நவீனமயமான எம்.எல்.ஏ. அலுவலகமாக மாற்றியுள்ளனர். எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு, முதல்-அமைச்சர் விஜய் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஆய்வு செய்கிறார். புதிய ரேஷன் கார்டுகள் மற்றும் பட்டாக்களையும் பொதுமக்களுக்கு அவர் வழங்க உள்ளார்.

SCROLL FOR NEXT