தமிழக செய்திகள்

ஒரே நாளில் 9 பேர் கொலை; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்-அமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் - பிரேமலதா

மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிப்பது நிவாரணத் தொகை அல்ல,அவர்களின் உயிரைப் பாதுகாப்பதே அரசின் முதன்மையான கடமை என பிரேமலதா கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் தொடர்ந்து, நடந்து வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. நேற்று ஒரே நாளில் காவலர் உட்பட 9 பேர் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை. தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து முதல்-அமைச்சர் மக்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் தொடர்ந்து வெளியாகி வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன.நேற்று ஒரே நாளில் காவலர் உட்பட 9 பேர் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை. இந்தச் சம்பவங்கள் குறித்த முழுமையான விவரங்களை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

காவல்துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்த விவகாரத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு மனித உயிருக்கு ரூ.40 லட்சம்தான் மதிப்பா? உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது மட்டுமே அரசின் கடமை அல்ல; இதுபோன்ற உயிரிழப்புகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே உண்மையான பொறுப்பு.

சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்வதும், காவல்துறையினரே வன்முறைக்குப் பலியாவதும் தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.பொதுமக்களின் உயிருக்கும், காவல்துறையினரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை.

வெறும் அறிவிப்புகளும் ஆய்வுக் கூட்டங்களும் போதாது. கொலைக் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும்.தமிழகத்தில் நிலவும் சட்டம்–ஒழுங்கு சீர்கேடு குறித்து முதலமைச்சர் மக்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இனி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிப்பது நிவாரணத் தொகை அல்ல; அவர்களின் உயிரைப் பாதுகாப்பதே அரசின் முதன்மையான கடமை என அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT