தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க வேண்டும் - திருமாவளவன் விருப்பம்

அதிமுகவில் நடைபெறும் உள்கட்சி பிரச்சினையில் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை வேளச்சேரியில் உள்ள இல்லத்தில் நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை, முதல்-அமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது:-

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றிபெற வேண்டுமெனக் கூறி வாழ்த்தினேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்ததை சுட்டிக்காட்டி பாராட்டினேன். இதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். முதல்-அமைச்சர் விஜய்யின் அணுகுமுறை அரசியல் களத்தில் புதியது. அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சி. அதிமுகவில் நடைபெறும் உள்கட்சி பிரச்சினையில் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

அதிமுகவில் 30 பேர் தனி அணியாக இருப்பதால் அவர்களால் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சி மாறி வாக்களிக்க முடியுமா? எனத் தெரியவில்லை. அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக என்றே நாங்கள் கருதுகிறோம். போட்டி அதிமுகவாக விலகி தனி குழுவாக இயங்கும் நிலையில் அவர்களுக்கு அங்கீகாரத்தை சபாநாயகரே வழங்குவார்.

முதல்-அமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதிடர் ரதன் பண்டிட் தவெகவின் செய்தி தொடர்பாளராக இருக்கிறார். செய்தி தொடர்பாளர் என்பதால் அந்த வாய்ப்பை வழங்கியிருப்பதாகவே கருதுகிறேன். ஜோதிடத்தை நம்புவது வேறு, மதவாத அரசியலில் ஈடுபடுவது வேறு. இவ்வாறு அவர் கூறினார்.