முதல்-அமைச்சர் விஜய்  
தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் நாளை தாராபுரத்தில் பிரசாரம்; போக்குவரத்து மாற்றம்

முதல்-அமைச்சரின் பிரசார வாகனம் செல்லும்போது சில பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்

முதல்-அமைச்சர் விஜய் நாளை தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி ஆகிய முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் தொகுதியில் 5 முனை போட்டி நிலவுகிறது. தாராபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலில் களத்தில் உள்ளனர்.

சூடுபிடித்த தேர்தல் களம்

அரசியல் கட்சிகள் தலைவர்களின் வருகையால் தாராபுரம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக எதிரிகட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராக சத்தியபாமா போட்டியிடுகிறார். இவர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ,க்களும் திருப்பூரில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் பிறகட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சிகளின் தலைவர்களும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் முகாம் அமைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த தீவிர தேர்தல் களத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து நாளை தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

போக்குவரத்து மாற்றம்

இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய் நாளை தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதனையொட்டி,

லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து, கார், இருசக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் இல்லை.

ஒட்டன்சத்திரம் வழியாக வரும் வாகனங்கள் உடுமலை-பொள்ளாச்சி வழியாகவும் கரூர் வழியாக வரும் வாகனங்கள் பழனி-பொள்ளாச்சி வழியாகவும் செல்லலாம்.

திருப்பூரில் இருந்து தென்மாவட்டத்துக்கு செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் பிரசார வாகனம் செல்லும்போது சில பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒத்துழைக்க மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

SCROLL FOR NEXT