AI Image 
தமிழக செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் உள்ள பள்ளியில் நாளை குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறார் முதல்-அமைச்சர் விஜய்

கேக் வழங்கும் புதிய திட்டத்தை த.வெ.க. அரசு புதிதாக செயல்படுத்துவதால் இதனை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை,

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார்.

குழந்தைகள் தினம்

நாடு முழுவதும் நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், 13-ந்தேதி (நாளை) அரசு பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாட உத்தரவிடப்பட்டு உள்ளது.

அப்போது, குழந்தைகளுக்கு கேக் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தவும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

கேக் வினியோகம்

கேக் வினியோகம் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சி முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய அறிவுறுத்தல் அளிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் என மொத்தம் 61 லட்சம் பேருக்கு கேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் தின வாழ்த்து அட்டை

முன்னதாக குழந்தைகள் தினத்தன்று பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி 45 கிராம் எடையுள்ள கேக் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. கேக்குடன் முதல்-அமைச்சரின் குழந்தைகள் தின வாழ்த்து அட்டையும் கொடுக்கப்பட உள்ளது.

சென்னையில் அரசு மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற சுமார் 3 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளது.

குழந்தைகள் தினத்தையொட்டி கேக் வழங்கும் புதிய திட்டத்தை த.வெ.க. அரசு புதிதாக செயல்படுத்துவதால் இதனை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை கொளத்தூரில்

இந்நிலையில், நாளை (வெள்ளிக் கிழமை) சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு கேக் வழங்கி முதல்-அமைச்சர் விஜய் குழந்தைகள் தினத்தை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SCROLL FOR NEXT