சென்னை,
தமிழ்நாட்டில், மொத்தம் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. அதாவது, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பக்கோணம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் என 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன.
இதில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை தவிர எஞ்சி உள்ள 7 போக்குவரத்துக் கழகங்களுக்கும் தமிழக அரசு 300 புதிய டீசல் மற்றும் சி.என்.ஜி. பஸ்களை வாங்கி உள்ளது. இந்த புதிய பஸ்கள் முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாளான கடந்த 22-ந் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் புதிய பஸ்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து இந்த 300 புதிய பஸ்களையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.