கோவை,
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகத்தை முதல்-அமைச்சர் விஜய் வருகிற 16-ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.
தமிழக பொதுப்பணித்துறை சார்பில், கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் டவுன் பஸ் நிலையம் அருகே உள்ள சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில், 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் எனப்படும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டுமான பணி கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது நிறைவடைந்து உள்ளது.
இந்த பெரியார் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடியில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கட்டப்பட்டு உள்ளது. மொத்த திட்ட மதிப்பில் ரூ.245 கோடியில் கட்டுமான பணிக்கும், ரூ.50 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், ரூ.5 கோடிக்கு இ-புத்தகங்கள் வாங்கவும் நிதி ஒதுக்கப்பட்டது. மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த நூலகத்தின் வளாகத்தில் பெரியார் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பெரியார் நூலகம் வளாகம் ஏ மற்றும் பி என இரு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியை கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம், ஸ்பேஸ் லிப்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம் கட்டப்பட்டு உள்ளது.
2-வது தளத்தில் சொந்தமாக புத்தகம் எடுத்து வருபவர்கள் படிக்க குறிப்பிட்ட இடமும், சிறுவர்களுக்கான நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 3-ம் தளத்தில் போட்டித்தேர்வு பயிற்சி மையம், நிர்வாகப்பிரிவு, நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 4-ம் தளத்தில் வரலாற்று புத்தகங்கள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, பருவ இதழ்கள், 5-வது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, ஸ்டாப் அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டர், 6-வது தளத்தில் ஆங்கிலம் கற்கும் பிரிவு, இன்குபேஷன் சென்டர், 7-வது தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் பெரியார் நூலகத்தின் திறப்பு விழா வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நூலகத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் காந்திபுரத்தில் உள்ள பெரியார் நூலகத்திற்கு வருகிறார். அங்கு பெரியார் சிலை மற்றும் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதற்காக பெரியார் நூலக வளாகத்தில் விழா மேடை அமைக்கப்பட உள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.