காலை உணவு திட்டம் 
தமிழக செய்திகள்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருவான்மியூர் அரசு பள்ளியில் நாளை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, கல்வியில் முழுமையான கவனம் செலுத்திடவும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காலை உணவு திட்டம்

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கடந்த 15.6.2026 அன்று நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தின்போது, காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த திட்ட விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள், கூடுதலாகப் பயன்பெறுவர். இதற்கென நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.724 கோடி ஒதுக்கீடு

இந்த திட்டத்திற்கு ஒட்டு மொத்தமாக ரூ.724 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தாலும், ஊரகப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினர்களால் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும்.

மாணவர்களின் உடல் நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை, கற்றல் ஆகிய அம்சங்களை ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைப்பு

இதனை முதல்-அமைச்சர் விஜய் நாளை காலை 8.30 மணிக்கு (22-ந்தேதி) திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தொடக்கப்பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து நடு நிலைப்பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பெரும் துணையாக அமையும்.

தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும்

முதலமைச்சர் விஜய், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாணவர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், இத்திட்டத்திற்காக பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் முறையாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து செவ்வனே செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

முன்னதாக கடந்த 18-ந்தேதி முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

அந்த கூட்டத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ராஜ்மோகன், ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலாளர் சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் பல்லவி பல்தேவ், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT