தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார்.இதையடுத்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னேடுத்து செல்லும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். தினமும் தலைமைச் செயலகத்துக்கு வரும் முதல்-அமைச்சர் விஜய், காலை முதல் மாலை வரை பல்வேறு துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த நிலையில், அவர் டெல்லி சென்று பிரதமர் மோடியையை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் மோடி 6 நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார். தொடர்ந்து அவர் நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வரும் 20-ந்தேதி இந்தியா திரும்புகிறார். பிரதமர் மோடி டெல்லி திரும்பியதும், முதல்-அமைச்சர் விஜய் அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமரை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்துக்கு நேரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் டெல்லி திரும்பியதும், முதல்-அமைச்சர் விஜய்க்கு நாள் மற்றும் நேரம் ஒதுக்கப்பட்டு, அது முதல்-அமைச்சர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படும் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைத்ததும், முதல்-அமைச்சர் விஜய் டெல்லி செல்ல உள்ளார்.இந்த சந்திப்பின்போது, குறிப்பாக தமிழகத்துக்கு மத்திய அரசு விடுவிக்காமல் உள்ள ஜி.எஸ்.டி. முழு நிலுவைத் தொகை, வெள்ள நிவாரண நிதி முழுமையாக விடுவித்தல், கல்வித் திட்ட நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளிடம் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்துவார்.
மேலும் சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டம், நெடுஞ்சாலை மற்றும் துறைமுகத் திட்டங்களின் விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல்களை விரைவுபடுத்த வேண்டும் என்பதையும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முதல்-அமைச்சர் விஜய் தனது டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இடதுசாரி தலைவர்களான டி ராஜா மற்றும் எம்.ஏ பேபி ஆகியோரையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. வரும் தேர்தல் காலங்களில் தேசிய கட்சிகளுடன் இணைந்து வியூகம் வகுத்து செயல்படுவதற்கான முன்னோட்டமாக விஜய்யின் இந்த டெல்லி பயணம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.