சென்னை,
முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்-அமைச்சர் விஜய் கடந்த மே மாதம் 27-ந் தேதி டெல்லிக்கு சென்று வந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழக நலன்கள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தார்.
கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது அணை திட்டத் துக்கு அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழக மீனவர் பிரச்சி னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து பேசினார்.
இந்தப் பயணத்தின்போது கூட்டணி கட்சியான காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரை அவர் சந்தித்து பேசவில்லை. இதற்கிடையில், மாநில முன்னேற்றத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை செய்வதற்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெறுவது வழக்கம். அதில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்பார்கள்.
நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வருகிற 11-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய், வருகிற 11-ந் தேதி டெல்லி செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். 3 நாள் பயணமாக டெல்லி செல்லும் விஜய் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.