சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக கடந்த 10ம் தேதி விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனிடையே, முதல்-அமைச்சராக பொறுப்பேற்றப்பின் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக, மரியாதை நிமித்தமாக பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்படி, திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை நேற்று சந்தித்தார். இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனை முதல்-அமைச்சர் விஜய் இன்று சந்தித்தார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். திருவல்லிக்கேணியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய்யை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் முதல்-அமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்து வரவேற்றார். காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் படத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.