சென்னை,
காங்கிரஸ் மாநில தலைவர் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“வரலாறு காணாத வகையில் நேபாள நாட்டில் பனிப்பாறை சரிவு ஏற்படுத்திய பெருவெள்ளத்தில் சிக்கி 392 பேர் பலியாகி இருக்கிறார்கள். 800 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 910 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களை மீட்கின்ற பணியில் இந்திய வெளியுறவுத்துறை, நேபாள அரசோடும், காத்மாண்டுவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்துடனும் தொடர்பு கொண்டு மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.
நேபாள நாட்டில் கைலாஷ் யாத்திரைக்காக தமிழ்நாட்டிலிருந்து 103 தமிழர்கள் பயணம் மேற்கொண்டனர். இதில் 54 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவதற்கு காத்மாண்டில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த மரணப் பெருவெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதோடு, எஞ்சியிருக்கிற குறிப்பாக, தமிழர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது அமைச்சரவை மூலமாக துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்மூலம் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. இத்தகைய துயரமான நேரத்தில் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு இருக்கிறது. தமிழர்களை மீட்க வேண்டிய கூடுதல் பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.
நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அவர்கள் தாயகம் திரும்பி வர அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் மேற்கொள்வார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.