தமிழக செய்திகள்

இன்று கொல்லூர் மூகாம்பிகை கோவில் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

அரசியல் கட்சி தலைவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சென்னை,

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றார். இந்த கூட்டத்தை முடித்த பிறகு டெல்லியில் ஓய்வெடுக்கும் விஜய், இன்று (வெள்ளிக்கிழமை) அங்கிருந்து தமிழகத்துக்கு புறப்பட இருந்தார். இந்த நிலையில் விஜய் இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் மங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கும் விஜய், அங்கிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காரில் செல்ல உள்ளார். உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்கை கோவில் மிகவும் பிரபலமானதாகும். கர்நாடகம் மட்டுமின்றி தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அரசியல் கட்சி தலைவர்கள்

இன்னும் சொல்லப்போனால் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் இந்த கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி உள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் இங்கு அடிக்கடி செல்வதற்கு ஆன்மிகம், ஜோதிடம் மற்றும் அரசியல் ரீதியாக காரணங்கள் சொல்லப்படுகிறது.

இந்த கோவிலில் மூலவராக வீற்றிருக்கும் மூகாம்பிகை அம்மன், முப்பெரும் தேவியரின் வடிவமாக திகழ்கிறார். அதாவது கொல்லூர் மூகாம்பிகை, மகாலட்சுமி (செல்வம்/செல்வாக்கு). மகாசரஸ்வதி (அறிவு/அரசியல் சாணக்கியத்தனம்), மாகாளி (வீரம்/எதிரிகளை வெல்லும் சக்தி) ஆகிய முப்பெரும் தேவியரின் வடிவமாக திகழ்கிறார். மேலும் இங்குள்ள சுயம்பு லிங்கத்தில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர்.

அரசியல் அதிகாரம்

அரசியல்வாதிகளுக்கு தேவையான அதிகாரம், செல்வாக்கு மற்றும் சரியான நேரத்தில், சரியான முடிவுகளை எடுக்கும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை கோவிலில் உள்ள முப்பெரும் தேவிகள் கொடுப்பதாக நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த கோவிலில் வேண்டி கொண்டால் மொத்த அதிகாரமும், அதனை சிறப்பாக நிர்வகிக்கும் ஆற்றலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அரசியல்வாதிகள் மத்தியில் உள்ளது.

அத்துடன் இந்த கோவிலில் சண்டி ஹோமம் (சத்ரு சம்ஹாரம்) நடத்தும்போது அரசியலில் எதிர்ப்புகளும், துரோகங்களும், மறைமுக எதிரிகளும் வீழ்த்தப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். இந்த கோவிலின் தீவிர பக்தர். அவர் இந்த கோவிலுக்கு தங்கவாள் காணிக்கையாக வழங்கி உள்ளார்.

சண்டி ஹோமம்

அதேபோல் ஜெயலலிதாவும், 2002-ம் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு. 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சண்டி ஹோமம் நடத்தினார். ஜெயலலிதா தனது அரசியல் வாழ்வில் சோதனையான காலகட்டங்களைச் சந்தித்தபோது, இங்கு வந்து சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்களை செய்துள்ளார்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியை பின்பற்றி தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். அத்துடன் அரசியல் எதிர்ப்புகள், மறைமுக எதிரிகளை வீழ்த்த சண்டி ஹோமம் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.