அருப்புக்கோட்டை:
சட்டப்பேரவையில் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. மக்கள் பிரச்சினைகள் குறித்து அனைவரும் இணைந்து சிந்திக்க வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.ரெட்டியபட்டியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள சட்டமன்றங்களில் பெரும் பாரம்பரியமும் புகழும் பெற்றது தமிழக சட்டப்பேரவை. மக்கள் அதிகாரத்தின் இறையாண்மையை வெளிப்படுத்தும் இடமான சட்டப்பேரவையை கடந்த முறை ஆளுநர் அலட்சியப்படுத்தினார். அதற்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.சட்டப்பேரவையில் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது. உடல் மொழி மூலமாகவோ, தரம் தாழ்ந்த வார்த்தைகள் மூலமாகவோ தாக்குதல் நடத்துவது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
தந்தையைத் தேடுகிறேன் என முதல் அமைச்சர் விஜய் கூறியது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதேபோல், அதற்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல் அமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசியதும் சரியானதல்ல. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும். மாநிலங்களின் உரிமைகளை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. மதச்சார்பின்மைக் கொள்கையை முதல்வர் விஜய் தொடர்ந்து கடைப்பிடிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நாங்கள் திமுகவுடன் மட்டுமல்ல, அதிமுகவுடனும் இணைந்து செயல்பட்டுள்ளோம். எதிர்காலத்திலும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிப்போம்.