தமிழக செய்திகள்

புதுக்கோட்டையில் 2-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் ரூ.19 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

தமிழக முதல்-அமைச்சர் விஜய், வருகிற 2-ந்தேதி புதுக்கோட்டைக்கு வருகை தந்து, புதிய பஸ் நிலையம் மற்றும் உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு வரவேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ரூ.19 கோடியில் புதிய பஸ் நிலையம்

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் ரூ.19 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல், மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் புதிய உள் விளையாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு கட்டிடங்களும் திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளன.

வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு, புதிய பஸ் நிலையம் மற்றும் உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

தனி விமானத்தில் திருச்சி வருகை

விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய், 2-ந்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர உள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் அல்லது சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முதல்-அமைச்சரின் வருகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேட் தளத்தை மாவட்ட கலெக்டர் அருணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ரோடு ஷோவுக்கு ஏற்பாடு

முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. விழா நடைபெறும் இடங்கள், அவர் பயணிக்கும் வழித்தடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், முதல்-அமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT