திருச்சி,
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமி ழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். தேர்தலில் த.வெ.க. பெற்ற வெற்றியை தொடர்ந்து விஜய் கடந்த 10-ந்தேதி தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். ஒருவர் 2 தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக முதல்-அமைச்சர் விஜய் வெளியூர் சுற்றுப்பயணமாக நாளை (திங்கட்கிழமை) திருச்சிக்கு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து பேசுகிறார்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு திருச்சியில் நாளை (ஜூன் 1ம் தேதி) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாவட்ட கலெக்டர் பிரத்திக் தயாள் உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய் திருச்சிக்கு வருகை தர உள்ளதால் நாளை (ஜூன் 1ம் தேதி) காலை 10 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாநகர பேருந்துகள் மத்திய பேருந்து நிலையம், திருவெறும்பூரில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மரக்கடை வழியே மெயின் கார்டு கேட் காந்தி சிலை அருகே பயணிகளை இறக்கி விட்டு அரண்சாலை வழி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.