தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முதல்-அமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்: துரை வைகோ

தமிழகத்தில் பிரதான போட்டி என்பது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு இடையேதான் நிலவுகிறது என்று துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க. முதன்மை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பதை ம.தி.மு.க. வரவேற்கிறது. இதன் மூலம் கூட்டணி மேலும் வலுப்பெறும். தமிழகத்தில் பிரதான போட்டி என்பது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு இடையேதான் நிலவுகிறது.

ம.தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், வேட்பாளர்கள் யார் என்பது குறித்து வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கவுள்ள பேச்சுவார்த்தைக்குப் பின்னரே அறிவிக்கப்படும். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமை இறுதி முடிவெடுக்கும். கூட்டணித் தலைமைக்கு இடங்களுக்காக நெருக்கடி கொடுக்கக் கூடாது. ஜனநாயகத்தைக் காப்பதற்கான இந்தத் தேர்தல் யுத்தத்தில், அனைவரும் வெற்றி இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டும்.

நடிகர் விஜய், மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்தோ அல்லது தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்தோ இன்னும் வெளிப்படையாகப் பேசவில்லை. எனவே, அவரது அரசியல் வருகை என்பது தி.மு.க. கூட்டணிக்குச் சாதகமாகத்தான் அமையும் என்று நான் பார்க்கிறேன்.

தற்போது மக்காச்சோளம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

அதேபோல், 'கிரீன் காப்பர்' என்ற பெயரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. இதனைத் தமிழக முதல்-அமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். தி.மு.க. அரசின் சாதனைகள் மக்கள் அறிந்ததே. தேர்தல் நெருங்குவதால், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேவையற்ற அவதூறுகளைப் பரப்பி வருகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது ம.தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் விநாயகா ஜி.ரமேஷ், மாநில தீர்மானக் குழு உறுப்பினர் முத்துச்செல்வம், கிரிவலம் ஒன்றிய செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.