சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2022 செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
பின்னர், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. விரிவாக்க திட்டத்தை ஸ்டாலின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்கிவைத்தார். தற்போது 17.55 லட்சம் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி தன் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம் 15 லட்சம் மாணவர்கள் இனி பள்ளிகளிலேயே காலை உணவு சாப்பிடுவார்கள்.
சமையலறை மற்றும் உபகரணங்கள் இருக்கும் பள்ளிகளில் செப்டம்பர் 17-ந்தேதியும், மற்ற பள்ளிகளில் அடுத்த ஒரு மாதத்துக்குள்ளும் இந்த திட்டம் தொடங்கப்படஉள்ளது. ஆக தமிழ்நாட்டில் இனி 34.36 லட்சம் மாணவர்களுக்கு பசிப்பிணி தெரியாது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டம் என்ற பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
முன்னதாக ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அடுத்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
இதேபோல, முதல்-அமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது சத்துணவோடு முட்டை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தநேரத்தில், 1-வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சுவை மிகுந்த காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். தற்போது முதல்-அமைச்சர் விஜய் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.