சென்னை,
நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் ’முதலமைச்சர் கோப்பை’ பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மண்டல மாநில அளவில் நடத்தி வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியானது, அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபட செய்யும் மிகச்சிறந்த முயற்சியாகும். இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை பாராட்டி, அவர்களை ஊக்குவித்து, உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது, இந்த போட்டிகளின் முக்கிய நோக்கமாகும்.
இதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் அக். 15-ம் தேதி முதல் நடத்தப்பட்ட மாநில அளவிலான ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளில் பங்கேற்றனர்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று (வியாழக் கிழமை) சென்னை நேரு விளையாட்டரங்கில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் சென்னை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்று வரும் பரிசளிப்பு விழாவில், முதல்-அமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மாவட்ட அணிக்கும் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கி வாழ்த்தி வருகிறார்.
இந்நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் விஜய், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போது முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் நடந்து வரும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை முதல்-அமைச்சர் விஜய் கண்டு ரசித்து வருகிறார்.