சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமைச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி, வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டதும், முன்னாள் முதல்-அமைச்சரின் செயலாளராக பணியாற்றியவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பதும் ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
முன்னதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) நியமனம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மாற்றப்பட்ட நடவடிக்கைகள் என அனைத்தும் தமிழ்நாடு அரசின் அதிகார கட்டமைப்பை நிலை குலைக்கும் அத்துமீறலாக கருதப்படுகிறது. மத்திய அரசின் அழுத்தத்திற்கு தேர்தல் ஆணையம் பணிந்து செல்கிறது என்று வலுவாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் உறுதி செய்து வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்குமா? என்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
பாஜகவிற்கு சாதகமாக, பாரபட்சப் போக்கில் செயல்படுவதையும் சேர்த்து முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, ஜனநாயகத்தை பாதுகாக்க, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பேராதரவு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.