தமிழக செய்திகள்

குழந்தை கடத்தல்.. 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்.. பெண் சிக்கியது எப்படி.?

சிசிடிவி காட்சிகளில் அந்தப் பெண் குழந்தையை கடத்தி சென்றது தெளிவாகப் பதிவாகியிருந்தது.

சென்னை,

அரசு மகப்பேறு மருத்துவமனை

சென்னை போரூர் முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் கீதா. இவர் கடந்த 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு, ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அதற்கு அடுத்த இரு நாட்களிலேயே கீதாவிற்குப் பெண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததால், அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கூலி தொழில்

கீதாவின் கணவர் கூலி தொழில் செய்து வருவதால் அவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த சமயத்தில்தான் கீதாவிற்கு ஒரு பெண் அறிமுகமாகியுள்ளார். தனக்கும் இங்குதான் குழந்தை பிறந்ததாகவும், தன் குழந்தையை மாமியாரிடம் வீட்டில் விட்டுவிட்டு குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும் அந்தப் பெண் கீதாவிடம் கூறியதாக தகவல் தெரியவந்துள்ளது.

டிஸ்சார்ஜ்

இதற்கிடையே, கீதாவின் கணவர் வேலைக்கு சென்ற பிறகு, அந்த பெண் கீதாவிற்கு உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது. கீதாவும் அந்த பெண்ணை பற்றி முழுமையாக விசாரிக்காமல் அவரிடம் நட்பாகப் பழகி வந்துள்ளார். மேலும், குழந்தையை அடிக்கடி பார்த்துக்கொள்ளும்படியும் அவரிடம் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில்தான், கீதாவை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்துள்ளது.

கணவர் இல்லாத நிலையில் வீட்டிற்கு செல்ல கீதா முடிவு செய்துள்ளார். மதியம் 2.30 மணி அளவில் அவர் ஆட்டோவிற்கு காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த பெண்மணி, 'நானும் வீட்டிற்குத்தான் செல்கிறேன்' என்று கூறி, 'நான் ஆட்டோ அழைத்து வருகிறேன்' என குழந்தையை தன் கையில் வாங்கிக்கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது.

ஜி-பே

குழந்தையை வாங்கி சென்ற அந்த பெண், நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால், அதிர்ச்சியடைந்த கீதா குழந்தையை மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக தேடியுள்ளார். பின்னர், தன் குழந்தையை காணவில்லை என ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக களமிறங்கிய போலீசார், சந்தேகத்திற்குரிய அந்த பெண் சென்ற இடங்களில் எல்லாம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ஒரு கடையில் ஜி-பே மூலம் பணம் செலுத்தியது போலீசாருக்கு தெரியவந்தது.

கைது

அதனை தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை போலீசார் பெற்றனர். அவரது செல்போன் டவர் இருப்பிடம் மற்றும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து தீவிரமாக தேடிய போலீசார், குழந்தையை கடத்திய பெண்ணை புளியந்தோப்பு பகுதியில் வைத்து கையும் களவுமாக 5 மணி நேரத்தில் பிடித்தனர். பிடிபட்டபோதும் அந்த பெண், இந்த குழந்தை என்னுடையது' என்று போலீசாரிடம் அடம் பிடித்துள்ளார். ஆனால், சிசிடிவி காட்சிகளில் அந்தப் பெண் குழந்தையை கடத்தி சென்றது தெளிவாகப் பதிவாகியிருந்ததால், போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் கொடுங்கையூரை சேர்ந்த ரோஸ்மேரி என்றும் அவருக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் விரக்தியில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையை கடத்திய விற்கும் நபர் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.