தமிழக செய்திகள்

கடலூர் அருகே சோகம்; போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை திடீர் உயிரிழப்பு

பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே, குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள நல்லாத்தூரை சேர்ந்தவர் ராஜி (வயது 27). டிரைவர். இவரது மனைவி ராஜம். இவர்களுக்கு 1½ வயதில் ஹரிஹரன் என்ற ஆண் குழந்தை இருந்தது.

குழந்தை ஹரிஹரன்

நேற்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்த நிலையில், தனது குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுப்பதற்காக நல்லாத்தூர் துணை சுகாதார நிலையத்திற்கு ராஜம் ஹரிஹரனை தூக்கிச்சென்றார். அங்கு குழந்தைக்கு சொட்டுமருந்து கொடுக்கப்பட்ட பின், தனது குழந்தையுடன் அவர் வீட்டுக்கு வந்தார்.

மயங்கிய குழந்தை

பின்னர், குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து தூங்க வைத்தார். மதியம் ஹரிஹரனை பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை தூக்கணாம்பாக்கம் அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே குழந்தை ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் குழந்தை ஹரிஹரன் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே, குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.