சென்னை,
மருத்துவக் கருவிகள் இல்லாததால் குழந்தைகள் உயிர் பறிபோனதாக தவெக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :-
மருத்துவக் கருவிகள் இன்றிப் பறிபோன குழந்தையின் உயிர் - விளம்பர அரசியலில் மட்டும் கவனம் செலுத்தும் தவெக அரசுக்குக் கண்டனம்!
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயைக் கண்டறியும் மருத்துவக் கருவிகள் கூட இல்லாத அவலத்தால் பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பெற்றெடுத்த குழந்தையைக் கைகளில் சடலமாக ஏந்தி, குழந்தையின் தாத்தா மருத்துவமனை வாசலில் கதறி அழுத காட்சி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் கலங்க வைத்துள்ளது. ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடி வரும் தவெக விஜய் தலைமையிலான அரசின் அலட்சியத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக அரசு செய்யும் ஆடம்பர விளம்பரச் செலவுக்கான தொகையை ஒதுக்கினாலே, தமிழக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான அனைத்து உயிர்காக்கும் மருத்துவக் கருவிகளையும் மிக எளிதாக வாங்கியிருக்க முடியும்! சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், திட்டங்களை விளம்பரப்படுத்துவதில் காட்டும் அதீத ஆர்வத்தை, பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றத் தேவையான மருத்துவக் கட்டமைப்புகளை உறுதி செய்வதில் எப்போது காட்டப் போகிறீர்கள்?
ஆடம்பர விளம்பர அரசியலை விடுத்து, அரசு மருத்துவமனைகளில் நிலவும் தீவிர உள்கட்டமைப்புச் சீர்கேடுகளைச் சரிசெய்வதே ஆட்சியாளர்களின் முதல் கடமை. ராமநாதபுரம் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் உபகரணங்கள் தடையின்றிக் கிடைப்பதைச் சுகாதாரத்துறை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். அத்துடன், குழந்தையின் அகால மரணத்திற்குப் பொறுப்பேற்று, பரிதவித்து நிற்கும் அந்த ஏழைக் குடும்பத்திற்குத் தேவையான நிவாரண நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.