ஆழித்தேரோட்டம் 
தமிழக செய்திகள்

சேலம் வாழப்பாடியில் சித்திரைத் திருவிழா... முதல் முறையாக ஆழித்தேரோட்டம்

வாழப்பாடியில் முதன்முறையாக ஆழித்தேரோட்டம் நடைபெற்றதால், பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி பெரியசாமி நகரிலுள்ள தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

வாழப்பாடி பெரியசாமி நகரில் முழுக் கற்றளி கோவிலான தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா தொடர்ந்து ஒரு வாரம் கொண்டாடப்பட்டது. நேற்று ஆழித்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

வண்ணத் திரைச் சேலைகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான மரத்தேரில், வைத்தியநாதர், தையல்நாயகி, மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சுவாமி உற்சவமூர்த்திகள் தேரில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தேரோடும் வீதிகளில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு தாம்பூலம் கொடுத்து, ஆழித்தேருக்கு வரவேற்பு அளித்து வழிபட்டனர்.

வாழப்பாடியில் முதன்முறையாக ஆழித்தேரோட்டம் நடைபெற்றதால், பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.