தமிழக செய்திகள்

சித்திரை திருவிழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருக்கல்யாணத்தையொட்டி பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றிக்கொண்டனர்.

மதுரை,

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட் டது. அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன். போரில் தேவர்களை வென்று இறுதியில் சிவபெருமானுடன் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அப்போது வில், அம்புடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் காட்சி தந்தனர். இதில், மீனாட்சி அம்மனாக சிவாதித்யன், சுந்தரேசுவரராக சட் டநாத ராஜசேகரன் ஆகியோர் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் கூட்டம் அலைமோதியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோலாகலமாக நடந்தது. அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக சென்று ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.

தொடர்ந்து 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிடத் திருமண சடங்குகள் நடத்தப்பட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டதைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணைச் சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கத் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றிக்கொண்டனர். 10 டன் வண்ணமிகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட திருக்கல்யாண மேடையில் திருப்பரங்குன்றத்திலிருந்து முருகன் பெருமான் தெய்வானையுடனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளியுள்ளனர்.

திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மனும், சுவாமியும் மணக் கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி இன்று பகல் முழுவதும் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். இரவு 7.30 மணிக்கு சுந்த ரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.

திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் காண்பதற்காக வடக்கு மற்றும் மேற்கு ஆடி வீதிகளில் தகர பந்தல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வெப்பத்தை தணிக்க 300 டன் வரை குளு குளு ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தண் ணீர் பாட்டில், பிரசாத பை வழங்கப்படுகிறது. கோவிலின் பகுதிகளில் பெரிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.

திருக்கல்யாண விழாவுக்காக போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீக்சித் தலைமையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாசி விதிகளில் போலீசார் உதவி மையம் அமைத்தும், காண்காணிப்பு கோபுரம் மூலமும், டிரோன்கள் மூலமும் கண்காணித்து வருகின்றனர். மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வந்துள்ள பக்தர்களுக்கு தனியார் பக்தர்கள் சபை சார்பில் சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது.

திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் நாளை காலை மாசி வீதிகளில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வலம் வரும் திருத்தேரோட்டமும், சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா மே 1- தேதியும் நடைபெறுகிறது. இதன்மூலம் மதுரை மாநகரம் முழுவதும் விழாக் கோலமாகக் காட்சி அளிக்கிறது.