திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். இந்த நிலையில் சித்ரா பவுர்ணமி கடந்த 30-ந் தேதி இரவு 9.52 மணியளவில் தொடங்கி நேற்று முன்தினம் இரவு 11.08 மணியளவில் நிறைவடைந்தது.
இதையொட்டி கடந்த 30-ந் தேதி காலை முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சுமார் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூறப்படுகிறது. கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
அப்போது பக்தர்கள் பொது மற்றும் ரூ.50 கட் டண தரிசனம் வழியாக கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப் பட்டனர். இதனால் நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஆன தாக பொது தரிசனம் வழியில் சென்றவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்டை வசதிகளான குடிநீர், கழிவறை, மருத்துவ முகாம்கள், 108 அவசர ஊர்தி வாகனங்கள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செய்திருந்தது.
மேலும் மாநகராட்சி சார்பாக பல்வேறு நகராட்சிகளில் இருந்து 2 ஆயிரத்து 105 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு திருவண்ணாமலை மாநகரம் மற்றும் கிரிவலப்பாதைகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தூய்மை பணிகளை மேற்கொள்ள 126 துப்புரவு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. கடந்த 30-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரையில் 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும் கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் அருகில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டதை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தூய்மை பணியாளர்களின் சிறப்பான சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.