தமிழக செய்திகள்

தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா தேர்வு

முதல்-அமைச்சர் இருக்கையில் விஜய் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

சென்னை,

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டி இருப்பதால் த.வெ.க.வின் பலம் 107 ஆக இருக்கிறது.

ஆனால் ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவைபட்ட நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டது. இதில் காங்கிரஸ் முதல் கட்சியாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததுடன், அமைச்சரவையிலும் இடம்பெறுவோம் என்று தெரிவித்தது.

அதனை தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பின்னர் கம்யூனிஸ்டு, விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தது. இந்த ஆதரவின் மூலம் த.வெ.க.வின் பலம் 120 ஆக உயர்ந்தது. இது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டியது.

இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சென்னை தலைமை செயலகம் வந்தார் முதல்-அமைச்சர் விஜய். முன்னதாக அங்கு அளித்த காவல்துறை மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார். முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதன்படி, மதுரை மாவட்டம் சோழவந்தான் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாளை பதவியேற்பு செய்து வைப்பார். 2011-16ல் அதிமுக எம்.எல்.ஏ ஆக இருந்த இவர், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெகவில் இணைந்து போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.