தமிழக செய்திகள்

விஜய் முதல்-அமைச்சர் ஆனதால் கிணற்றில் மிதந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிய சோழவந்தான் எம்.எல்.ஏ.

மதுரை மாவட்டம், சோழவந்தானை சேர்ந்த கருப்பையா, சட்டமன்ற தேர்தலின்போது த.வெ.க. வெற்றி பெற வேண்டும். முதல்-அமைச்சராக விஜய் வரவேண்டும் என சோழவந்தான் ஜெனகை மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்தாராம்.

மதுரை,

மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் த.வெ.க. சார்பில் கருப்பையா போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் இவர் சட்டசபையில் தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்று புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கருப்பையா சட்டமன்ற தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற வேண்டும். முதல்-அமைச்சராக விஜய் வரவேண்டும் என சோழவந்தான் ஜெனகை மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்தாராம். தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் த.வெ.க. தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தற்போது விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். எனவே தனது வேண்டுதலை நிறைவேற்றியதாக ஜெனகை மாரியம்மனுக்கு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட அன்றே வெற்றி சான்றிதழுடன் கோவிலுக்கு வந்து கருப்பையா சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி தனது வேண்டுதலான கிணற்றில் மிதந்தபடி (ஜல பிரதட்சணம்) நேர்த்திக்கடன் செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று காலையில் சோழவந்தான் நகரி சாலையில் ஆலங்கொட்டாரத்தில் 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் த.வெ.க. கொடியுடன் இறங்கினார். பின்னர் கிணற்றில் மிதந்தபடி சுமார் அரை மணி நேரம் நேர்த் திக்கடன் செலுத்தினார். பின்னர் ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் த.வெ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.