தமிழக செய்திகள்

குரோம்பேட்டையில் சாலை விபத்து: லாரியில் சிக்கி 50 அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி

லாரியில் சிக்கிய ஜமுனா சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.

தாம்பரம்,

கும்பகோணத்தை சேர்ந்தவர் ஜமுனா (23 வயது) நர்சிங் முடித்து உள்ளார். இவர் குரோம்பேட்டையில் தோழி ஸ்ரீஜா என்பவருடன் தனியாக அறை எடுத்து தங்கி வேலை தேடி வந்தார். ஸ்ரீஜா குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தோழிகள் இருவரும் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக மொபட்டில் சென்றனர். ஸ்ரீஜா வண்டியை ஓட்ட ஜமுனா பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை, ரேடியல் சாலையை இணைக்கும் பாண்ட்ஸ் மேம்பாலம் அருகே சென்றபோது மேம்பாலம் மீது செல்ல வந்த டாரஸ் லாரி திடீரென மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டுடன் லாரியில் சிக்கிய ஜமுனா சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழி ஸ்ரீஜா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். தோழி ஜமுனா கண்முன் இறந்ததை கண்டு அவர் கதறி துடித்தார். காயம் அடைந்த ஸ்ரீஜா சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பலியான ஜமுனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான கடபேரியை சேர்ந்த சதிஷ் (27 வயது) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோழியுடன் சென்ற இளம்பெண் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT