தமிழக செய்திகள்

சினிமா உதவி இயக்குனருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் வெறிச்செயல்..என்ன நடந்தது..?

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம வாலிபரின் முகம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

நாகர்கோவில்,

நான்கு வழிச்சாலை பகுதியில் நடந்த சினிமா படப்பிடிப்பை பார்க்க வந்த உதவி இயக்குனருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.

சினிமா உதவி இயக்குனர்

குமரி மாவட்டம் தோவாளை நான்கு வழிச்சாலை பகுதியில் 'ஆல் மோஸ்ட் நல்லவன்' என்ற சினிமா படத்துக்கான படப்பிடிப்பு கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த படத்தில் நடிகர் ராஜூ ஜெயமோகன் என்பவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கீழத்தெருவை சேர்ந்த கார்த்திகை சீலன் (வயது 44) என்ற உதவி இயக்குனர், இந்த படப்பிடிப்பை பார்க்க வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் சினிமா படப்பிடிப்பு முடிவடைந்ததும் குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றபடி இருந்தனர். அந்த சமயத்தில் கார்த்திகை சீலன் மற்றும் சிலர் நான்கு வழிச்சாலை பகுதியில் நின்றனர்.

தீவிர சிகிச்சை

அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். பின்னர் திடீரென அரிவாளுடன் கார்த்திகை சீலனை குறி வைத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் உடலில் சில இடங்களில் வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்தார். கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதும், வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிய கார்த்திகை சீலனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம வாலிபரின் முகம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து சினிமா உதவி இயக்குனரை வெட்டிய ஆசாமி யார்? எதற்காக வெட்டினார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT