தமிழக செய்திகள்

தாமரை மலர்களை திருட துணைபோகாததால் பேரூராட்சி ஊழியர் கொலை - 4 பேர் கைது

ஆயுதங்களுடன் வந்த சைரஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் திடீரென கவினைச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கினர்.

கன்னியாகுமரி,

தாமரை மலர்களை திருட துணைபோகாததால் பேரூராட்சி ஊழியரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை அடுத்த அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் கவின் ( வயது 27 ). இவர் அழகப்பபுரம் பேரூராட்சியில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தார். அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சைரஸ் ( வயது 32 ). இவர் அங்குள்ள குளங்களில் சட்டவிரோதமாக தாமரை மலர்களை வளர்த்து வந்தார். இந்த நிலையில், சைரஸ் தாமரை மலரை பறிப்பதற்காக மின் விளக்குகளை அணைக்குமாறு கவினிடம் தெரிவித்துள்ளார். கவின் இதற்கு இணக்காததால், சைரஸ் கவினை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கவின் மீன் கடையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆயுதங்களுடன் வந்த சைரஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் திடீரென கவினைச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில், பலத்த காயமடைந்த கவின், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதலை நடத்திய சைரஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு உயிரிழந்த கவினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை செய்து தலைமறைவான சைரஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர். தீவிர தேடுதலுக்குப் பின், சைரஸ் மற்றும் விசிக நிர்வாகி முத்துக்குமார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT