சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திரிப்பதாவது;-
கண்ணகி நகர் நகர சமுதாய சுகாதார மையத்தில் 3 மருத்துவர்கள், 8 செவிலியர்கள், 2 மகப்பேறு உதவியாளர்கள், 2 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், 1 மருந்தாளுர், 1 ஆயா, 10 பெண் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
கண்ணகி நகர் நகர சமுதாய சுகாதார மையத்தில் ஒரு மகப்பேறு மருத்துவர் வாரத்திற்கு 3 நாட்கள் பணிபுரிகிறார். இம்மருத்துவமனையில் 24 மணிநேரமும் பிரசவம் மற்றும் மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் சராசரியாக தினமும் 200 முதல் 250 புறநோயாளிகள் பயன்பெறுகின்றனர். மேலும் மாதம் 15லிருந்து 20 பிரசவங்கள் நடைபெறுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி, கண்ணகி நகர் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14/02/2026 அன்று மெர்சி ஸ்டீபன், 33 வயது இரண்டாவது கர்ப்பத்தை பதிவு செய்துள்ளார். அன்றிலிருந்து கண்ணகி நகர் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழக்கமான பரிசோதனை மேற்கொண்டுள்ளார். ஏழு மாதத்திற்கு பிறகு அவரை கண்ணகி நகர் நகர நலவாழ்வு மையத்திற்கு (UCHC) பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவரின் பிரசவத் தேதி 25/07/26. அவர் வயிற்று உபாதை காரணமாக 08/06/2026 அன்று இரவு கண்ணகி நகர் நகர நலவாழ்வு மையத்திற்கு (UCHC) சென்றிருந்தார்.
பணியில் இருந்த மருத்துவர் பரிசோதித்ததில், நோயாளியின் முக்கிய உடல் அறிகுறிகள் (Vitals) சீராக இருந்தன. சிசுவின் இதயத் துடிப்பு சீராக இருந்தது. அவருக்கு வயிற்றுப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, வலி தொடர்ந்து இருந்தால் அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்கு (KGH) செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்.
அவர் 09/06/2026 காலை கண்ணகி நகர் மருத்துவமனைக்கு வந்து வயிற்று வலி இருப்பதாகக் கூறினார். மருத்துவர் பரிசோதித்ததில் முக்கிய உடல் அறிகுறிகள் (Vitals) சீராக இருந்தன. சிசுவின் இதயத் துடிப்பு சீராக இருந்தது, உடன் இருந்தவர்களுக்கும் அவரின் உடல் நிலையைப்பற்றி எடுத்துக்கூறப்பட்டது
குறைப்பிரசவம் (Preterm) மற்றும் ஏற்கனவே சிசேரியன் (Previous LSCS) செய்யப்பட்டிருந்ததால், அப்பெண்மணி 108 ஆம்புலன்ஸ் மூலமாக காலை 11:30 மணிக்கு அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்கு (KGH) பணியில் இருந்த மருத்துவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார்.
அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அதில் 2.2 கிலோ எடையுள்ள இறந்த குழந்தை பிறந்தது. நஞ்சுக்கொடி பிரிதல் (Abruptio placenta) குழந்தை இறப்புக்கு காரணமாக கண்டறியப்பட்டது. தற்போது கர்ப்பிணித்தாய் நலமாக உள்ளார்.
கர்ப்பிணித் தாய் மருத்துவமனைக்கு வந்தபோது 3 மருத்துவர்கள் பணியில் இருந்தனர். கர்ப்பிணிக்கு மருத்துவர்கள் மூலம் நல்ல முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் பணியில் மருத்துவர்கள் இல்லை என்ற செய்தி உண்மைக்கு புறம்பானதாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.