தமிழக செய்திகள்

திருச்சி துறையூரில் மாணவர்களிடையே மோதல் - 13 வயது சிறுவன் உயிரிழப்பு

வீட்டிற்கு வந்த செல்வத்திற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். சரவணன் என்பவரின் 13 வயது மகன் செல்வத்திற்கும், பாரதி என்கின்ற 15 வயது சிறுவனுக்கும் தலையில் பந்து பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

பின்னர் சிறுவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், வீட்டிற்கு வந்த செல்வத்திற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். மேலும் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

15 வயது சிறுவன் தாக்கியதில் செல்வம் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.