குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபரும், சினிமா நடிகருமான ஜி.பி.முத்துவின் வீட்டின் அருகே கோவில் கட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 20-ந் தேதி நள்ளிரவில் ஜி.பி.முத்து வீட்டின் முன்பு எதிர் தரப்பினர் கோழியை அறுத்து பலி கொடுத்துப் பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட மோதலில், இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதில் ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி அனிதா, உறவினர் இளையபெருமாள் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து ஜி.பி.முத்து அளித்த புகாரின்பேரில், அப்பகுதியைச் சேர்ந்த பரமசிவன், மாடசாமி, ஆத்திசெல்வம், வேம்புநாதன், முத்துகிருஷ்ணன், மகேஷ், சுந்தரவேல், சுடலையாண்டி ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோன்று எதிர் தரப்பை சேர்ந்த முத்து மகேஷ், சுந்தரவேல், மாடசாமி, ஆத்திசெல்வம் ஆகியோரை ஜி.பி.முத்து, அவருடைய தந்தை கணேசன், ஜி.பி.முத்துவின் மனைவி அஜிதா, ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி அனிதா, இளையபெருமாள், வேல்முருகன் மற்றும் ஜி.பி.முத்து குழந்தைகள் சேர்ந்து பிளாஸ்டிக் நாற்காலிகளால் தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில், ஜி.பி.முத்து உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.