தமிழக செய்திகள்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் தொடர்பாக மாணவர்களிடையே மோதல்!

பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் காயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி,

ஆவணப்படம் திரையிடப்பட்ட விவகாரம் தொடர்பாக மாணவர் அமைப்புகளுக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவணப்படம் திரையிடல்

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடன் அம்பேத்கர் மாணவர் இயக்கம் சார்பில் நேற்று இரவு உமர் காலித் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் எஸ்.எப்.ஐ. மற்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு பாதுகாப்புக்காக இருந்துள்ளனர்.

மாணவர்களிடையே மோதல்

ஆவணப்படம் திரையிடப்பட்டு முடிந்ததும், அங்கு கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது ஆவணப்படத்தை எதிர்த்த ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மற்ற மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தள்ளிவிட்டுக் கைகலப்பிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் மாணவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மோதலில் காயமடைந்த சில மாணவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT