தமிழக செய்திகள்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதிகளில் வெளியீடு

விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது.

சென்னை,

தமிழக அரசின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற்றது. இதனை சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இதேபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 6-ந் தேதி வரை நடந்தது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.

இதைத்தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இப்பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து மாணவ-மாண விகள் பெற்ற மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே மாதம் 8-ந் தேதி வெளியிடப்படும் எனவும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 20-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்அடிப்படையில் அதற்கான பணிகளை பள்ளிக்கல்வி, தேர்வுத்துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதிகளில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதியவர்களுக்கும் அடுத்த மாதம் 20-ந் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.